வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றி, தன் ஆட்சியில் அமெரிக்கா பொருளாதார ரீதியாக மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஆண்டுக்கான பாரம்பரிய நாடாளுமன்ற கூட்டு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தின் சாதனைகளை பட்டியலிட்டார்.

அவர் உரையில் கூறியதாவது:
“12 மாதங்களுக்கு முன்பு நான் இதே மேடையில் உரையாற்றியபோது, அமெரிக்கா கடுமையான பொருளாதார மந்தநிலை, வரலாறு காணாத அளவில் பணவீக்கம், உள்நாட்டில் அதிகரித்த குற்றச்செயல்கள், உலகம் முழுவதும் நிலவும் போர்கள் மற்றும் கலவரங்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஓராண்டில் அந்தச் சூழ்நிலை முழுமையாக மாறிவிட்டது. இன்று அமெரிக்கா பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது,” என டிரம்ப் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறினார்: “கடந்த 4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்த புதிய முதலீடுகள், என் தலைமையில் வெறும் ஒரு ஆண்டில் 18 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளன. இது எந்த நாட்டும் இதுவரை சாதிக்காத ஒரு வரலாற்று முன்னேற்றம். உலக பொருளாதாரத்தில் மீண்டும் அமெரிக்கா முதன்மை நிலையைப் பெற்றுள்ளது. இது நமது பொற்காலம் என்று பெருமையுடன் கூறுகிறேன்,” என்றார்.

டிரம்பின் இந்த உரை, அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உயர்வை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. அவரது பேச்சு குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடையே ஆரவார வரவேற்பைப் பெற்றது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் அவரது கூறுகையை அரசியல் விளம்பரம் என விமர்சித்துள்ளன.