நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை மீட்ட ராணுவம்
அபுஜா: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியா, கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களால் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மட்டுமல்லாமல், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனுடன், ‘பண்டிட்ஸ்’ என அழைக்கப்படும் ஆயுதக் குழுக்கள் கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகள் ஆகியவற்றை கடத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தக் குழுவை நைஜீரியா அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது இவர்களின் வழக்கமான செயல்பாடாகும். சமீப காலமாக பள்ளிக்குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்திருப்பது அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் தேதி, நைஜர் மாகாணம் பம்பிரி நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் என மொத்தம் 315 பேரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை மீட்க நைஜீரிய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. ஆரம்பத்தில், 50 குழந்தைகள் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்தனர். பின்னர், இம்மாத தொடக்கத்தில் 101 குழந்தைகளை பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில், ராணுவம் 130 பள்ளிக்குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளது. இதனால், மொத்தம் 281 குழந்தைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். எனினும், இன்னும் 30க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. அவர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரிய அதிபர் பயோ, “பள்ளிக்குழந்தைகள் யாரும் பணய கைதிகளாக இல்லை. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், நைஜீரியாவில் பள்ளி பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.