நியூடெல்லி:

அமெரிக்காவுடன் சமீபத்தில் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்ட மிகப்பெரிய மூன்று சரக்கு கப்பல்கள் தற்போது இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளன. இவை மார்ச் மாதத்தில் இந்தியாவை அடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வந்தது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதனைத் தொடர்ந்து இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் அளவை குறைக்க இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா தெரிவித்தது. அதற்கு மாற்றாக வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி ஆகியவை வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா கண்காணிப்பில் நடைபெறும் இந்த வர்த்தகத்தின் மூலம், வெனிசுலாவின் எண்ணெய் மீண்டும் உலக சந்தையில் நுழைகிறது.

வெனிசுலா, உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் அதன் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது வரை இந்தியா, வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இருந்தது.

இப்போது புதிய வர்த்தக ஒப்பந்தத்துடன், இந்தியா மீண்டும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் தொடங்கியிருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.