சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரது இணைப்பு நிகழ்வு தாமதமாகும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி அதிருப்தி காரணமாக பல முக்கிய தலைவர்கள் கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஒரு அதிருப்தி அணி உருவானது.
தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதையடுத்து, கட்சியின் எதிர்காலம் மற்றும் தலைமையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சில எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளின் மூலம் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் அதிமுக தலைமையுடன் இணக்கமாக செயல்படத் தொடங்கினர். ஆனால் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்ந்து தனித்த அரசியல் நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தனர்.
இந்த சூழலில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருந்தனர்.
அவர்களின் வரிசையில் சி. விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக அவர் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டதாகவும், தவெக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 29-ம் தேதி பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அந்த நிகழ்வில் தனது ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிர்வாக மாநாட்டில் அரசு நிர்வாகம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அரசியல் நிகழ்ச்சிகளுக்கான நேர ஒதுக்கீடு சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜயபாஸ்கரின் தவெக இணைப்பு விழா ஜூலை 2-ம் தேதி மாமல்லபுரத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்வை மாநில அளவிலான முக்கிய அரசியல் நிகழ்வாக மாற்ற தவெக தலைமை திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தவெகவில் இணையும் விஜயபாஸ்கருக்கு முக்கியமான கட்சி பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அவரது நிர்வாக அனுபவம், மாவட்ட அளவிலான செல்வாக்கு மற்றும் அமைப்பு திறனை கருத்தில் கொண்டு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து தவெக அல்லது விஜயபாஸ்கர் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, அவரது இணைப்பு விழா மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.