அமெரிக்கா – ஈரான் மோதலால் ஏற்பட்ட சர்வதேச எரிசக்தி சந்தை நெருக்கடியின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு பெரும் சவாலாக மாறியது. தற்போது சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நிலைமை சீராகத் தொடங்கியுள்ள போதிலும், விலை குறையாததால் ஓட்டல் மற்றும் உணவகத் தொழில்துறையினர் இன்னும் நெருக்கடியிலேயே உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின.
இதன் தாக்கமாக இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்தது. முன்பு ரூ.2,000-க்கும் குறைவாக கிடைத்த 19 கிலோ வணிக சிலிண்டர், தற்போது ரூ.3,300 முதல் ரூ.3,500 வரை விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இந்த திடீர் விலை உயர்வு உணவக உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அரசு நிறுவனங்களின் விநியோகஸ்தர்களிடம் தேவையான அளவில் சிலிண்டர்கள் கிடைக்காத சூழல் உருவானது. இதனால் பல ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
இதன் விளைவாக டீ, காபி உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டன. ரூ.10-க்கு விற்கப்பட்ட டீ ரூ.15 ஆகவும், சில இடங்களில் காபி ரூ.25 வரை உயர்த்தப்பட்டதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் இட்லி, தோசை, பொங்கல், வடை, பரோட்டா மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகளிலும் 10 சதவீதம் வரை உயர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் குறைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் சரிவை சந்தித்துள்ளன. இதனால் வணிக சிலிண்டர் விலையும் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஓட்டல் உரிமையாளர்களிடையே ஏற்பட்டது. ஆனால் சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் மட்டும் நீக்கப்பட்டுள்ள நிலையில், விலையில் எந்த மாற்றமும் ஏற்படாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பு கூறுகையில், சிலிண்டர் கிடைப்பதில் இருந்த சிக்கல் தற்போது நீங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், விலை உயர்வு தொடர்வதால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்கும் சூழல் இல்லை என்றார். ஓட்டல் தொழிலில் எரிவாயு மட்டுமின்றி தொழிலாளர் சம்பளம், மூலப்பொருட்கள், வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதால் விலை குறைப்பு சாத்தியமற்றதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதால் உணவகங்களில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சில உணவுப் பொருட்களை மீண்டும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறினார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களில் தனியார் நிறுவனங்களிடம் மாறிய வாடிக்கையாளர்களை மீண்டும் தங்களது சேவைக்கு திரும்பச் செய்வது அரசு நிறுவன விநியோகஸ்தர்களுக்கு புதிய சவாலாக உருவாகியுள்ளது. தடையற்ற விநியோகத்தை உறுதி செய்து வணிக நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.