சென்னை:
தமிழக கடலோரப் பகுதிகளின் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று (ஜூன் 25) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 26) திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கூடுதல் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம்.