டெஹ்ரான்: கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரின் உச்சகட்டத்தின் போது கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல், 131 நாட்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 4) இறுதி அஞ்சலிக்காகப் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இத்தனை காலம் இவரது இறுதிச் சடங்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
கொலை மற்றும் போர்: கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளைத் தாக்கும் நோக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான சிக்கல்கள் எழுந்தன. கடந்த மாதம் 17-ம் தேதி இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே, சற்றே அமைதி நிலவத் தொடங்கியது.
சடங்கு ஏன் தாமதமானது? பொதுவாக இஸ்லாமிய மரபுப்படி, உயிரிழந்தவரின் உடல் 24 மணிநேரத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கமேனியின் மரணத்திற்குப் பிறகு ஈரான் போர்ச் சூழலில் இருந்ததால், மக்கள் திரண்டால் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அரசு கருதியது. மேலும், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதால், இறுதிச் சடங்கை நடத்தப் பாதுகாப்பான சூழலுக்காக அதிகாரிகள் காத்திருந்தனர். கடந்த காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன கசப்பான அனுபவங்களும் இந்தத் தாமதத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
உடல் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது? இஸ்லாமிய முறைப்படி உடலைப் பதப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கமேனியின் உடல் மைனஸ் டிகிரி உறைபனியில், அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் மிகுந்த பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இப்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உடல் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகள்: இன்று தொடங்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஜூலை 9-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கமேனி மொசல்லாவில் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புனித குவாம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியாக மஸ்ஹாத் நகரில் உள்ள இமாம் ரேஸா மசூதியில் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றன.
இந்த இறுதிச் சடங்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இது வெறும் இறுதிச் சடங்காக மட்டுமின்றி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிரான ஈரானிய மக்களின் சபதமாகவும், ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைகள், போர் முடிவுக்கு வந்தாலும், அந்தத் தழும்புகள் இன்னும் ஆறவில்லை என்பதையே உலகிற்குப் பறைசாற்றுகின்றன.