நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சென்னை:
பிரபல நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு, விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல், சமூக கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், “சாத்தியமான திட்டங்களையே மக்களிடம் வைப்போம்” என்று விஜய் முன்பே தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி வந்தார். பின்னர், நேற்று காஞ்சீபுரத்தில் அவர் மீண்டும் மக்கள் சந்திப்பை தொடங்கினார். இம்முறை சாலையில் அல்லாமல், 2,000 பேருக்கான கூடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பேசிய விஜய், வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டார். அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் வழங்கி வரும் அறிவிப்புகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே இப்படியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு வருமா?
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடியும் வரை மாநில அரசிற்கு குறிப்பிடத்தக்க கடன் இல்லை. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மாநில கடன் துவங்கியது. அதன் பிறகு, திராவிட கட்சிகளின் ஆட்சிகாலங்களில் கடன் தொடர்ந்து அதிகரித்து, தற்போது ₹10 லட்சம் கோடியை கடந்துள்ளது. 2025–26 நிதியாண்டு இறுதியில் இது ₹15 லட்சம் கோடியை மீறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அரசு புதிய திட்டங்களுக்கு கடன் பெறலாம். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளுக்காக வழங்கப்படும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஆட்சிக்கு வந்த பின் கடன் சுமையை மிக அதிகமாக உயர்த்துகின்றன.
2006-ல் திமுக அரசு இலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கியது.
2011-ல் அதிமுக அரசு மிக்சி, கிரைண்டர், விசிறி வழங்கியது.
தற்போதைய திமுக அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்குகிறது.
இப்படிப் பெரிய அறிவிப்புகள் வெளியான ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் பெரிதாக உயர்ந்துள்ளது என்பது புள்ளிவிவரங்களில் தெரிகிறது.
இந்த நிலையில், விஜய்யும் அதே பாணியில் வீடு, மோட்டார் சைக்கிள் போன்ற பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால், அதற்கான நிதி எங்கிருந்து வரும், எப்படி செயல்படுத்தப்படும் ஆகிய விவரங்களை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
ஆட்சியைப் பிடிக்க அரசியல் தலைவர்கள் நடைமுறைக்கு வாய்ப்பில்லாத வாக்குறுதிகள் அளிப்பது மக்களைப் பெரிதும் கவலைப்படுத்துகிறது. வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் போதே, அவற்றை நிறைவேற்ற வேண்டிய நிதி எவ்வாறு பெறப்படும் என்பதை அரசியல் தலைவர்கள் தெளிவாக கூற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

