வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாள் அரசு நிர்வாக முடக்கம் முடிவடைந்தது. அரசு நிதி மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால், அரசு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் அரசு துறைகளுக்கான பட்ஜெட் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முந்தைய அரசின் பல திட்டங்கள் நீக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதற்கு ஒப்புதல் வழங்க மறுத்தது. தற்போது செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா நிறைவேற குறைந்தது 60 பேரின் ஆதரவு அவசியமுள்ளதால், அது நிறைவேறவில்லை.
இதையடுத்து நிதி முடக்கம் ஏற்பட்டதால் பல அரசு துறைகளும் சேவைகளும் முடங்கின. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுமுறைக்கு அனுப்பப்பட்டனர். நிதி பற்றாக்குறையும், பணியாளர் தட்டுப்பாடும் காரணமாக முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த நிதி முடக்கம் 43 நாட்களாக நீடித்தது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியினரின் சில முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஆதரவு அளித்ததால் மசோதா செனட் சபையில் நிறைவேறியது. பின்னர், பிரதிநிதிகள் சபையிலும் மசோதா ஒப்புதல் பெற்றது. அதன் பின், மசோதா அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதிபர் டிரம்ப் அதில் விரைவில் கையெழுத்திட்டதுடன், 43 நாட்களாக நீண்ட அரசு நிர்வாக முடக்கம் முடிவுக்கு வந்தது.
மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: “சட்டவிரோத குடியேற்றத்தாருக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை பறிக்க முயன்ற ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கி வைத்தனர். ஆனால் இன்று, மிரட்டல் அல்லது அழுத்தம் மூலம் பணம் பறிக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஒருபோதும் தலை குனிய மாட்டோம்,” என்றார்.
தற்போதைய பட்ஜெட்டில் சில துறைகளுக்கு 2026 ஜனவரி 30 வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தேதிக்குப் பிறகு அரசு இயங்க தொடர, புதிய நிதி மசோதா மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

