Home » “பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிய தமிழகம்: இதுவே திமுக ஆட்சியின் சாதனையா?” – சீமான் குற்றச்சாட்டு

“பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிய தமிழகம்: இதுவே திமுக ஆட்சியின் சாதனையா?” – சீமான் குற்றச்சாட்டு

சென்னை: பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியதே திமுக அரசின் ‘சாதனை’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மீது இடம்பெறும் பாலியல் சீண்டல், வன்முறை, கொலை, நகை பறிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தினசரி நிகழும் நிலைமையாகிவிட்டது என்பதால் சட்டம் ஒழுங்கு தரம் முழுமையாக சீரழிந்துள்ளது.

நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கும்மிடிப்பூண்டி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இப்போது பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

திமுக ஆட்சியில் பெண்கள் மீது தொடர்ந்து திடீர் தாக்குதல்கள் நடத்தும் துணிவு இந்த சமூக விரோதிகளுக்கு எங்கிருந்து வருகிறது? பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்டும், திமுக அரசு அதை ஏன் புறக்கணிக்கிறது? ஒவ்வொரு சம்பவத்துக்கும் பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நடிக்கும் இந்த நாடகம் இன்னும் எத்தனை நாள் தொடரப்போகிறது?

பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திமுக அரசு மேற்கொண்டுள்ளது? அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்? பெண்கள் மீதான வன்முறைகளில் இந்தியாவில் முதலிட மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருப்பதே ‘திராவிட மாடல்’ என்ற பெயரா?

திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் போதைப்பொருள் புழக்கமே சாதாரண மனிதரையும் சமூக விரோதியாக மாற்றியிருக்கிறது என்பதே கடந்த நான்கு ஆண்டுகளின் சாதனையாகும். திமுக ஆட்சி தொடரும் வரை பெண்கள் மீது இத்தகைய மோசமான வன்முறைகள் தொடருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ராமநாதபுரம் 12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் விரைவாகக் கடுமையான தண்டனை கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் இத்தகைய பெண்களுக்கு எதிரான கொடிய வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *