புதுடில்லி: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து தேவையற்ற சர்ச்சை உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.

கைவிரிப்பு

சென்னைக்கு அடுத்ததாக மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மதுரையில் திருமங்கலம்–ஒத்தக்கடை இடையேயான 31.93 கி.மீ தூரத்திலும், கோவையில் அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரை மற்றும் உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரை மொத்தம் 39 கி.மீ தூரத்திலும் மெட்ரோ திட்டத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற, திருத்தப்பட்ட திட்ட அறிக்கையையும், தேவையான கூடுதல் ஆவணங்களையும் தமிழக அரசு 10 மாதங்களுக்கு முன் அனுப்பியது.

இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. “2017ம் ஆண்டு விதிகளின்படி, மக்கள் தொகை 20 லட்சத்தைத் தாண்டிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டம் அமல்படுத்தப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் மக்கள் தொகை மட்டுமே உள்ளது” என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோவிற்கு பதிலாக BRTS போன்ற தனிப்பாதை பஸ் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

குற்றச்சாட்டு

இதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
“’கோயில் நகரம்’ மதுரைக்கும் ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் ‘NO METRO’ என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளது!

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை நகரங்களுக்குப் போதும் மெட்ரோ ஒப்புதல் வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது தப்பானது. கூட்டாட்சிக் கருத்தியலைக் குலைக்கும் இந்த அணுகுமுறையை தமிழக அரசு ஏற்காது. சென்னை மெட்ரோ பணிகளை தாமதப்படுத்த முயன்ற போதும் நாம் முறியடித்து முன்னேறினோம்; அதுபோல மதுரை, கோவையிலும் வளர்ச்சிக்குத் தேவையான மெட்ரோவை கொண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார்.

விளக்கம்

இதற்கு மறுப்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் வெளியிட்ட அறிக்கையில்:

“மெட்ரோ போன்ற மிக உயர்ந்த செலவுடைய திட்டங்கள் பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்கும்படி 2017ல் கொள்கை உருவாக்கப்பட்டது. இதை அரசியல் ரீதியாக மாற்றி சர்ச்சை செய்யும் ஸ்டாலின் அவர்களின் செயல் துரதிர்ஷ்டவசமானது.

2024 அக்டோபர் 3 அன்று சென்னை மெட்ரோ 2ம் கட்ட 119 கி.மீ திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தப் பெரிய நிதி ஒப்புதலை மதிக்காமல் அரசியல் செய்வது சரியல்ல” என கூறினார்.

அவர் கோவை மற்றும் மதுரை திட்டங்களில் காணப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்:

  1. கோவையின் பாதை நீளம் சென்னையை விட குறைவு இருந்தும், அதைவிட அதிகமான பயணிகள் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது முதல்நோக்கில் தவறாக தெரிகிறது.

  2. சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவிற்கும் இடையிலான பயண நீளம் மற்றும் வேக மதிப்பீடுகள், பயணிகள் மெட்ரோவிற்கு மாறும் நிலைக்கு பொருந்தவில்லை.

  3. கோவையின் 7 மெட்ரோ நிலைய பகுதிகளில் போதுமான ‘Right of Way’ இல்லை.

  4. மதுரையின் ‘Comprehensive Mobility Plan’ படி, தற்போதைய பயணிகள் எண்ணிக்கைக்கு மெட்ரோ அல்ல, BRTS முறையே பொருத்தமானது.

மேலும், கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை 15.85 லட்சமாக இருந்தாலும், திட்டமிடல் பகுதியின் மக்கள் தொகை 7.7 லட்சம் மட்டுமே என்றும், திட்ட அறிக்கையில் பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல், நாடு முழுவதும் 10,000 குளிர்சாதன மின்சார பஸ்கள் இயக்கப்படும் ‘PM Electric Bus’ திட்டத்தில் பங்கேற்காமல், மத்திய அரசின் நிதி உதவியைப் பயன்படுத்தத் தவறியது தமிழக அரசே என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு தனது விளக்கத்தில் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.