சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள், நிகழ்ச்சிகள் என தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.

இந்த நிலையில், திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் Sathyaraj தனது உரையால் அரசியல் கவனத்தை ஈர்த்தார். அவர் பேசியபோது, நடிகர்களின் மேடை பேச்சு மற்றும் அரசியல் கொள்கை மேடை குறித்து வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். “டயலாக் பேசுறது வேற மேடை. மேட்டர் இல்லாதவன் கூட டயலாக் பேசிட்டு கைத்தட்டல் வாங்கிக்கிட்டு போயிருவான். ‘என்னம்மா கண்ணு’ன்னு சொன்னா கூட கூட்டம் கைத்தட்டும். இது வெறும் வெட்டி உதார். எல்லா நடிகர்களுக்கும் இது செய்யத் தெரியும்,” என்று அவர் நகைச்சுவையுடன் கூறினார்.
ஆனால், அதுவே உண்மையான அரசியல் மேடை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். “கொள்கையை பேசுற மேடை இது. நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்தும் திமுக மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் காரணம் இருக்கிறது,” என்று தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மக்கள் தங்களது மனசாட்சியின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நம்ம குடும்பம் ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இதை ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியிடம் கேட்க வேண்டும். மனசாட்சி படி நடந்தால் உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தல் சாதாரண அரசியல் போட்டி அல்ல என்றும், இது சித்தாந்தங்களுக்கிடையேயான போட்டி என்றும் சத்யராஜ் கூறினார். “இந்த தேர்தலில் போட்டி உங்களுக்கும் எங்களுக்கும் கிடையாது. இது சமூக நீதிக்கும் சனாதானத்திற்கும் இடையேயான போட்டி. உலகத்தில் இரண்டு சித்தாந்தங்கள்தான் இருக்கின்றன. ‘அனைவருக்கும் எல்லாம்’ என்பது ஒரு சித்தாந்தம். ‘எல்லாம் எனக்கே வேண்டும்’ என்பது மற்றொன்று,” என்று அவர் விளக்கினார்.
சனாதான சித்தாந்தம் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கே அனைத்தும் சென்றடைய வேண்டும் என்பதாக இருக்கிறது என்றும், அதற்கு மாறாக திராவிட சித்தாந்தம் மற்றும் சமூக நீதி சிந்தனை அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். “எப்படி பார்த்தாலும் சமூக நீதி சித்தாந்தமே வெல்லும்,” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
நடிகர் சத்யராஜின் இந்த உரை அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் சித்தாந்த அடிப்படையிலான கடுமையான போட்டியாக மாறும் என்பதற்கான சுட்டிக்காட்டாக அவரது கருத்துக்கள் பார்க்கப்படுகின்றன.