புதுடெல்லி:
மேற்கு ஆசியப் போர் காரணமாக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்படுகின்றனர். வேலை இடங்களில் புதிய இணைப்பு பெறுவதில் சிரமம் உள்ளதால், 5 கிலோ சிலிண்டரை நம்பியுள்ளனர். ஆனால் கட்டுப்பாடுகளால் அவர்களும் திணறுகின்றனர்.

இதற்கு எளிய தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும்; வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்துகின்றன. செல்லுபடியான அடையாள அட்டைகளை (ஆதார், பான், டிரைவிங் உரிமம், ரேஷன் கார்டு உள்ளிட்டவை) எடுத்துச் சென்று கியாஸ் விநியோகஸ்தர்களை அணுகி 5 கிலோ சிலிண்டரைப் பெறலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. 4ஆம் தேதி மட்டும் 90 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த எளிய நடைமுறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும். போர் சூழலில் கியாஸ் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.