லயோனல் மெஸ்சியின் இந்திய பயணம் – கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு; அடுத்த கட்டமாக ஐதராபாத் பயணம்

கொல்கத்தா: உலக கால்பந்தின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்த மெஸ்சிக்கு விமான நிலையத்திலேயே ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்சியை ஒரே பார்வை காண திரண்டிருந்தனர். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் கோஷம் எழுப்பி, கொடிகளை அசைத்து, உற்சாக ஆரவாரம் செய்தனர்.

மெஸ்சியின் வருகையை முன்னிட்டு கொல்கத்தா நகரம் முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவியது. லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலக கோப்பையை உயர்த்தியபடி இருக்கும் இந்த சிலை, மெஸ்சியின் உலகக் கோப்பை வெற்றியை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்தார். திறப்பு நிகழ்ச்சியின் போது இந்தியா மற்றும் அர்ஜென்டினா கொடிகளை ரசிகர்கள் உயர்த்திப் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெஸ்சியின் வருகையையொட்டி, 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பெய்ஸ், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

கொல்கத்தா பயணத்தை முடித்த பிறகு, மெஸ்சி இன்று பிற்பகலில் ஐதராபாத்துக்கு புறப்படுகிறார். அங்கு இரவு நேரத்தில் நடைபெறும் காட்சி கால்பந்து போட்டியில் அவர் விளையாட உள்ளார். அதன் பின்னர், நாளை மும்பைக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இந்திய பயணத்தின் இறுதிக்கட்டமாக, 15ஆம் தேதி டெல்லிக்கு புறப்படும் மெஸ்சி, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

மெஸ்சியின் இந்த இந்திய பயணம், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், விளையாட்டு உலகில் பெரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.