சென்னை:
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்கில் இறங்கியுள்ளன.
அதில், அதிமுக–திமுக கூட்டணிகள் ஓரளவுக்கு அமைந்துவிட்டன.
ஆனால், இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் தேமுதிக (தீபா விஜயகாந்த் கட்சி) அமைதியான கணக்கில் இருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தக் கூட்டணிக்கும் உறுதியான பதிலை அளிக்கவில்லை.
கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் “நேரம் வந்தால் அறிவிப்போம்” என்கிற நிலையைப் பின்பற்றி வருகிறார்.
அதிமுக, தவெக, திமுக ஆகிய மூன்று தரப்புகளுடனும் ஒரே நேரத்தில் பேரம் பேசும் நிலை தேமுதிகவில் நிலவுகிறது.
இதனால், அதிமுக மற்றும் திமுக இரண்டும் “தேமுதிக கூட்டணியில் சேருமா, வெளியே போகுமா” என்ற குழப்பத்தில் உள்ளன.
அதேநேரத்தில், இரு கூட்டணிகளும் தேமுதிகவின் “கூட்டணிப் பேரம்” அதிகமாய் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் சிறிய உரசல் நிலவுகிறது.
ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால், அந்த இடத்தை நிரப்பி கூட்டணியில் அதிக சீடுகள் பெறலாம் என்ற நம்பிக்கையில்தான் பிரேமலதா விஜயகாந்த் தற்போது காத்திருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் தான், திமுகவோ அதிமுகவோ எந்தத் தரப்பிலும் அவர் இதுவரை தெளிவான ஆதரவை வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில், தேமுதிக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது.
அதன்பிறகு, சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவை கட்சியின் மாநாட்டிற்குப் பிறகு அறிவிப்போம் என கூறப்பட்டது.
ஆனால் மாநாடு முடிந்து இரண்டு வாரங்கள் கடந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு எட்டு தொகுதிகள் வரை வழங்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தேமுதிக தரப்பில் அதற்கு பதிலாக 21 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா இடம், மற்றும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஏழு தொகுதிகள் வரை வழங்கலாம் என ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரேமலதா தரப்பில் குறைந்தபட்சம் பத்து தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் – தவெக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் பரவி வருகின்றன.
ஒருவேளை ராகுல் காந்தி, தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தால், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பிரேமலதா தற்போது காத்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க பாஜக தரப்பில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாஜக தரப்பினர் பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
ஆனால், அதனை பிரேமலதா விஜயகாந்த் மறுத்துவிட்டார்.
மொத்தத்தில், தேமுதிக எந்தக் கூட்டணியிலும் சேருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இன்னும் பதிலின்றி உள்ளது.
இரு கூட்டணிகளிடமும் பேரம் பேசும் தேமுதிகவின் இந்த நெருக்கடி நிலை,
அதிமுகக்கும் திமுகக்கும் புதிய சவாலை உருவாக்கி உள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.