திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விபத்து என கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் போலீஸ் விசாரணையில் கொலையாக மாறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (22) என்பவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே தோட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று முகேஷ் கண்ணூர் – யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே ரெயிலில் தியாகராஜனும் தனது மகளுடன் பயணம் செய்தார். அவர்கள் மூவரும் ஒரே ரெயில் பெட்டியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தியாகராஜனின் மகள் தனது இருக்கையில் இல்லாமல் நீண்ட நேரமாக காணப்படவில்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என்று பார்த்து வருவதாக கூறி முகேஷ் அவரைத் தேடி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தியாகராஜன், தனது மகளையும் முகேஷையும் தேடி ரெயில் பெட்டிக்குள் சென்றார்.

அப்போது ரெயில் பெட்டியின் வாசல் பகுதியில் முகேஷ் மற்றும் தனது மகள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்ததை தியாகராஜன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் அவர் கடும் கோபமடைந்தார். ஆத்திரத்தில் முகேஷை எட்டி உதைத்ததாகவும், அதனால் அவர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததாகவும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

இரவு நேரம் என்பதால் அந்த சம்பவத்தை ரெயிலில் இருந்த மற்ற பயணிகள் யாரும் கவனிக்கவில்லை. பின்னர் ரெயில் கோவை வந்தபோது தன்னுடன் பயணம் செய்த முகேஷ் காணாமல் போய்விட்டதாக தியாகராஜன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோவை ரெயில்வே போலீசார் விசாரணை தொடங்கினர். இரவு நேரம் என்பதால் முகேஷ் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து பாலக்காடு மற்றும் கோவை ரெயில்வே போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் அருகே தேடுதல் நடத்தினர்.

அப்போது பாலக்காடு ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட காஞ்சிரக்கடவு ரெயில்வே மேம்பாலம் அருகே முகேஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதலில் இது விபத்து என கருதப்பட்டாலும், தியாகராஜனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் கூறிய தகவல்கள் முரண்பட்டதாக இருந்ததால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆத்திரத்தில் முகேஷை ரெயிலில் இருந்து எட்டி உதைத்து தள்ளியதாக தியாகராஜன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தனது மகளுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த கோபத்தில் அந்த செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தியாகராஜனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் முழு விவரங்களை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.