சென்னை,

சிங்கப்பூரில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்களிடம் ரூ.24 லட்சம் வரை மோசடி செய்த சம்பவத்தில் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மலேசியாவைச் சேர்ந்த ரேகா மற்றும் சென்னையைச் சேர்ந்த துர்கா, ஐஸ்வர்யா ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். இதனால் அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது தந்தைக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்றும் அதற்காக பண உதவி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய நாங்கள் நண்பர்களாக இருந்து அவருக்கு பலமுறை பண உதவி செய்தோம். பின்னர் ஐஸ்வர்யா தன்னால் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தர முடியும் என்று கூறினார்.

அப்போது நான் சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதனால் வேலையை மாற்றும் எண்ணம் ஆரம்பத்தில் எனக்கு இல்லை. இருப்பினும் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 4 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக ஐஸ்வர்யா தொடர்ந்து வற்புறுத்தினார்.

அவரது வார்த்தைகளை நம்பிய நான், எனது வேலையை ராஜினாமா செய்து சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல சம்மதித்தேன். என்னுடன் ரேகா மற்றும் துர்காவும் அதே நிறுவனத்தில் வேலைக்கு செல்ல ஒப்புக்கொண்டனர். பின்னர் வெளிநாட்டு வேலைக்கான விசா, ஆவணங்கள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட காரணங்களைக் கூறி ஐஸ்வர்யா எங்களிடம் பல கட்டங்களாக பணம் வசூலித்தார்.

இந்த வகையில் மொத்தமாக ரூ.24 லட்சம் வரை நாங்கள் அவரிடம் கொடுத்தோம். பின்னர் துர்கா திடீரென வேலைக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறி விலகினார். இதையடுத்து ஐஸ்வர்யா குறித்து சந்தேகம் எழுந்தது.

அப்போது தான் ஐஸ்வர்யா எங்களுக்கு காட்டிய பணி நியமன ஆணை போலியானது என்றும், அவர் கூறிய நிறுவனம் உண்மையில் இல்லை என்றும் தெரிய வந்தது. இதன் மூலம் திட்டமிட்டு நாடகமாடி எங்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் போலீசில் புகார் அளித்தோம் என்று சுஷ்மிதா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தரமணி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யா (28) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

மேலும் ஐஸ்வர்யா எம்.எஸ்.சி பட்டதாரி என்பதும் தெரிய வந்துள்ளது. இதுபோன்று வேறு யாரிடமாவது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து மக்களிடம் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.