
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஜித்குமார், ‘ஆசை’, ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ முதல் சமீபத்திய ‘குட் பேட் அக்லி’ வரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
தற்போது ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற சொந்த அணியை தொடங்கி பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் அன்பிற்குரிய அஜித் சார். எங்களை ஊக்கப்படுத்தியதற்கும், இந்தியாவை பெருமைப்படுத்தியதற்கும் மனமார்ந்த நன்றி. நீங்களே நம் தேசத்தின் ஆகச்சிறந்த பெருமை… நம் பத்ம பூஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், இன்னும் பல சிறப்பான நினைவுகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதிக்கின் இந்த உணர்ச்சி பூர்வமான பதிவு அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.