தமிழக முதலமைச்சரான விஜய்: பதவியேற்பின் முதல் நிமிடமே இருமாதம் இலவச மின்சாரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று ஞாயற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் முன்னிலையில் விஜய் பதவிப்பிரமாணம் செய்தார். அவரைத்தொடர்ந்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியவர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் தமிழகத்தின் 13வது முதலமைச்சராக விஜய் தலைமை தாங்கிய புதிய அரசு பொறுப்பேற்றது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், முக்கிய நிர்வாகக் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான அறிவிப்பு இருமாதங்களுக்கு 200 யூனிட்கள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்பதாகும். இந்தத் திட்டத்திற்கான கோப்புகளில் விஜய் முதல் கையெழுத்திட்டு, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்சாரச் செலவைக் குறைக்கும் நலத்திட்டத்தை அறிவித்தார். இது மக்களின் வீட்டுக்கு நேரடியாக செல்லும் முதல் நலத்திட்டமாக பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.
மின்சார திட்டத்துடன் இணைந்து, போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கோப்புகளிலும் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட்டார். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்ற பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு போலீஸ் பிரிவு அமைப்பு அறிவிக்கப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்க முக்கிய முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியலில் புதிய காலகட்டத்தைத் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் முதல் கையொப்பத்தை மக்கள் நலத்திற்காக செலுத்தியது பொது மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இருமாதம் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை போன்ற திட்டங்கள், தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு முக்கியமான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக அரசு, விரைவில் அமைச்சரவை அமர்வு நடத்தி மேலும் நலத்திட்டங்களை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.