மும்பை: இந்தியா–இஸ்ரேல் இடையிலான நட்பின் அடையாளமாக, இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிரம்மாண்ட சிலையை நிறுவ அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மும்பைக்கான இஸ்ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாச் கூறுகையில், “சிவாஜி மகாராஜ் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இஸ்ரேலின் பெரிய நகரங்களில் ஒன்றில் சிவாஜி மகாராஜ் சிலை நிறுவப்படும். இந்தத் திட்டம் இரு நாட்டு மக்களையும் நீண்டகால நோக்கில் ஒன்றிணைக்கும். சிலையின் வடிவமைப்பு மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பெறுவதற்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.
மேலும், “மகாராஷ்டிராவுக்கும், இஸ்ரேலிய சமூகத்திற்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளின் அடையாளமாக இச்சிலை விளங்கும். இஸ்ரேல் மக்களிடையே சிவாஜி மகாராஜின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நட்புறவு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு தனது முழு ஆதரவை வழங்கும்” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சிலை, இந்தியா–இஸ்ரேல் நட்பின் புதிய அத்தியாயமாகவும், இரு நாடுகளின் கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் அடையாளமாகவும் அமையும்.