சென்னை:
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டன. இதையடுத்து எழுந்த சர்ச்சைக்கு தற்போது அவர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
Vishnu Vishal நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான Gatta Kusthi திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஜூலை 3-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு தீவிர விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது விஷ்ணு விஷால் அளித்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர், நடிகர் Rajinikanth மற்றும் Vijay குறித்து பேசியிருந்தார். அந்த கருத்துகள் சில ரசிகர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள விஷ்ணு விஷால், “ரஜினியை மட்டும் ஏன் ‘தலைவர்’ என்று அழைத்துவிட்டு, விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். விஜய் சார் சொன்னதுபோல நெகட்டிவிட்டியை புறக்கணியுங்கள் என்பதே என் பதில்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கட்டா குஸ்தி 2 பட நிகழ்வில் ஒரு கமெண்ட் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளிக்கும்போது உதாரணமாக ரஜினிகாந்த் சாரின் பெயரை கூறினேன். யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் அது தேவையற்ற சர்ச்சையாக மாறிவிட்டது” என்றார்.
அவர் மேலும், “அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சார் கூட சில விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தலைவர் தானே மேடையில் நின்று ‘எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் முதலில் யார் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்களோ அதுவே உண்மை என பரவுகிறது. அதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் அது உண்மையாகிவிடுகிறது” என்று கூறினார்.
சமூக வலைதளங்களில் கருத்துகள் வேகமாக பரவுவதால் பல நேரங்களில் தவறான புரிதல்கள் உருவாகின்றன என்றும், நடிகர்களுக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அதே சுதந்திரம் நடிகர்களுக்கும் உள்ளது. ஆனால் நடிகர்கள் பேசும்போது மட்டும் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுதான் வருத்தமாக இருக்கிறது” என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
இந்த விளக்கத்தின் மூலம் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார் விஷ்ணு விஷால். தற்போது அவரது இந்த புதிய விளக்கமும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.