திருச்சி:

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் திரும்பியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவிலிருந்து சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் எஸ். வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் நால்வரும் இணைப்பு விழாவுக்கு பிறகு தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களான தமிழ்ச்செல்வன், ராம்குமார், திருஞானசம்பந்தன் மற்றும் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜவர்மன் ஆகியோரும் தவெகவில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அரசியல் வட்டாரங்களில் முதலில் 5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சில முக்கிய பெயர்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 59 பொதுக்குழு உறுப்பினர்களும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 49 பொதுக்குழு உறுப்பினர்களும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இரு மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் சுமார் 15 ஆயிரம் பேர் வரை இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைமையினர் இதனை கட்சியின் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் முக்கிய அரசியல் முன்னேற்றமாக பார்க்கின்றனர். சமீபத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்திய தவெக, தற்போது பிற கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்களை இணைத்துக்கொண்டு தனது அரசியல் ஆதரவை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இணைப்பு நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக நடைபெறும் பட்சத்தில், அதிமுகவின் உள்கட்சி நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து புதிய விவாதங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இணைப்பு விழா தமிழக அரசியலின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.