சென்னை:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த 2026-27 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் வாயிலாக நடைபெறும் இந்த கலந்தாய்வில், மாநிலம் முழுவதும் 67,390 ஆசிரியர்கள் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 15 முதல் 22 ஆம் தேதி வரை EMIS தளத்தில் பெறப்பட்டன.
இந்த முறை ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டதால் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில் 21,372 இடைநிலை ஆசிரியர்கள், 4,447 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,003 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 7,249 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 34,071 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் பள்ளிக்கல்வித் துறையில் 17,426 பட்டதாரி ஆசிரியர்கள், 10,475 முதுநிலை ஆசிரியர்கள், 1,269 உடற்கல்வி ஆசிரியர்கள், 537 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 978 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 981 கணினி ஆசிரியர்கள் உள்ளிட்ட 33,319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கோரி 33,319 ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரி 20,541 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் விண்ணப்பித்த 34,701 பேரில் 33,601 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான கலந்தாய்வுகள் ஜூலை 30 ஆம் தேதி வரை கட்டப்படியாக நடைபெற உள்ளன.
இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்ற ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணுவ வீரர்களின் இணையர், விதவை ஆசிரியர்கள், மனைவியை இழந்த ஆசிரியர்கள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோர் ஆகியோருக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஆசிரியர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்றும், தாமதமாக வருபவர்கள் அல்லது வருகை தராதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மேலும் விண்ணப்பங்களில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருப்பது பின்னர் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் விரும்பிய இடங்களில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் இந்த பொது மாறுதல் கலந்தாய்வு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.