தெஹ்ரான்:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகே இறுதி ஒப்பந்தம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவு மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கத்தாரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இரு நாடுகளின் பிரதிநிதிகள் கத்தாருக்கு சென்றிருந்த போதிலும், நேரடி பேச்சுவார்த்தை நடைபெறாது என பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஈரான் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், அமெரிக்காவுடன் ஈரான் தற்போது எந்த புதிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்னர் இறுதி ஒப்பந்தம் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த அவர், “நாங்கள் ஒரு நண்பருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு எதிராக செயல்படக்கூடிய மற்றும் முழுமையாக நம்ப முடியாத ஒரு எதிரியுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என்று கூறினார்.

அமெரிக்காவின் செயல்பாடுகள் மீது ஈரான் தரப்பில் இன்னும் சந்தேகங்கள் நீடித்து வருவதாகவும், அதனால் தான் ஒப்பந்தத்தின் அம்சங்கள் நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை முதலில் உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், ஈரான் அமைதியை விரும்புகிறது என்றாலும், தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் போருக்குத் தயாராக இருப்பதாகவும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். “போருக்குத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே வலிமையாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், நாங்களும் அதற்கேற்ப பதிலளிக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் அவர் முக்கிய தகவலை வெளியிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் 60 நாட்கள் வரை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி செல்ல அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு உலக வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினசரி கோடிக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே அந்த பகுதியில் ஏற்படும் எந்த மாற்றமும் உலக பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை ஈரானின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஒப்பந்த நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மற்றும் நிரந்தர தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.