முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி சதித் திட்டம்? கைதானவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்கு ரூ.180 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக, இந்த வழக்கில் கைதானவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இதற்கான சதித்திட்டத்தை தீட்டிய அதிர்ச்சி விபரமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சட்டசபை சூழலும் குதிரை பேர புகாரும்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில், அதிமுக தரப்பில் வென்ற சில எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து வந்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். மறுபுறம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் எனப் பேசி வந்தார்.

எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரும் அடுத்தடுத்த கைதுகளும்: இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு அதிரடி புகார் அளித்தார். அதில், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, ஐபிடிஎஸ் (IBDS) கருத்துக்கணிப்பு நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான தியாகராஜன், நரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கரூரைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கரூருக்கே சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பெங்களூருவில் பதுங்கியிருந்த மேலும் 3 பேர் கைது: கைதானவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வன், மாடம்பாக்கம் அதிமுக பிரமுகர் சீனிவாசன், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு வந்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவன சதியும், ரூ.180 கோடி வாக்குமூலமும்: கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது கசிந்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில் தான் இந்த பேரம் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதற்காக மொத்தம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகக் கைதானவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஒரு முன்னணி நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஒரு வார காலமாக தங்கியிருந்து, ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் எப்படியோ கசிந்துவிட்டதை அறிந்தவுடன், அவசர அவசரமாக ஹோட்டல் அறைகளைக் காலி செய்துவிட்டு தப்பிய ஓடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சதித்திட்டத்திற்குப் பின்னணியில் இருந்த அந்த கார்ப்பரேட் நிறுவனத்தை காவல்துறை தற்போது கண்டறிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.