தாமிரபரணி பாசனத்துக்கு இன்று முதல் நீர் திறப்பு – 40,830 ஏக்கர் பயன்பெறும்
திருநெல்வேலி | 27 நவம்பர் 2026
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு 630 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 40,830 ஏக்கர் நேரடிப் பாசன வசதி பெறும்.
2027 மார்ச் 31 வரை, சுமார் 125 நாட்களுக்குப் பாசன நீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வளத் துறையின் அறிவிப்பின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 27,324 ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 13,506 ஏக்கரும் இந்த நீர் திறப்பால் பயன்பெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள விளைநிலங்களுக்கு நீர் கிடைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் வடக்கு, தெற்கு பிரதான கால்வாய்கள் வழியாகப் பாசன நீர் வழங்கப்படும்.
— அரசுபார்வை செய்திகள்