திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தில் நடைபெற்ற தந்தை-மகன் படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண தண்ணீர் குழாய் சண்டையில் தொடங்கிய பகை, தற்போது 9 உயிர்களைப் பறித்த கோர சம்பவமாக முடிந்துள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி? மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து (40), தனது மகன்கள் சின்னத்துரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்து காளிமுத்துவின் பைக் மீது மோதியது. இதில் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயமடைந்த காளிமுத்துவை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டித் தலையைத் துண்டித்துச் சென்று கரம்பை மெயின் ரோட்டில் வீசிச் சென்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
9 உயிர்களைப் பறித்த 20 ஆண்டு பகை 2006-ம் ஆண்டு இரண்டு குடும்பப் பெண்களுக்கு இடையே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சிறிய தகராறு, காலப்போக்கில் கொடூரமான முன்விரோதமாக மாறியது. சித்திரபுத்திரன் குடும்பத்தினருக்கும், பெருமாள்பாண்டியன் குடும்பத்தினருக்கும் இடையே நடந்த தொடர் மோதல்களில், இதுவரை 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகளாக அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது அதே பாணியில் மீண்டும் ஒரு படுகொலை அரங்கேறியுள்ளது.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை வீரவநல்லூர் காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மகேந்திரன் (29), குமார் (23) மற்றும் முத்துச்செல்வன் (29) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அதிகாரிகள் விளக்கம் கொலையாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூலச்சி கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும், படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் மூலமாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாகத் தொடரும் இந்த வன்முறைச் சங்கிலி, சமூகத்தில் நிலவும் தீராத பகையின் கோர முகத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.