சல்மான் கான் நடிப்பில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘மாத்ருபூமி’. படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், படக்குழு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

சர்ச்சையும் மாற்றங்களும் இந்தத் திரைப்படம் முதலில் ‘பேட்டில் ஆப் கல்வான்’ (Battle of Galwan) என்ற தலைப்பில் தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து, சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகப் படத்தின் பெயர் ‘மாத்ருபூமி’ என மாற்றப்பட்டது. மேலும், சீனாவை நேரடியாகக் குறிப்பிடும் காட்சிகளைக் குறைப்பது மற்றும் சில முக்கியக் காட்சிகளை மறுபதிவு செய்வது போன்ற மாற்றங்களை படக்குழு மேற்கொண்டது.

தாமதம் ஏன்? – எழுந்த வதந்திகளும் மறுப்பும் படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்குவதை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) நிறுத்தி வைத்துள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் ஒப்புதல் பெறத் தாமதமாவதே இதற்குக் காரணம் என்றும் தகவல் பரவியது. இதனால் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த இப்படம் குறித்த திட்டமிடலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இதற்குப் பதிலளித்துள்ள படக்குழு, “படம் இன்னும் சென்சார் வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்படவே இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளது. சென்சார் சான்றிதழ் நடைமுறைகள் தொடங்கப்படாததால், தாமதம் குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என்று படக்குழுவினர் மறுத்துள்ளனர்.