பெண்களின் வலிமை என்பது அவர்கள் குடும்பத்திற்காகச் செய்யும் தியாகங்களில் மட்டுமல்ல, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து அவர்கள் நிமிர்ந்து நிற்கும் தருணங்களில்தான் இருக்கிறது. இந்த நிதர்சனத்தை அச்சு அசலாகப் பிரதிபலித்த திரைப்படம் 2023-ல் வெளியான மலையாளத் திரைப் படமான ‘காதல்: தி கோர்’ (Kaathal: The Core). ஜியோ பேபி இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்த இந்தப் படம், குடும்பம், மதம் மற்றும் சமூகம் பெண்ணின் மீது சுமத்தும் கற்பிதங்களை மிக நுணுக்கமாக விமர்சனம் செய்கிறது.

திரை தேவதைகளின் மீட்பர் ஓமனா ஜோதிகா நடித்த ‘ஓமனா’ கதாபாத்திரம், பல இந்திய இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பு. கணவன், மகள், குடும்பப் பொறுப்புகள் எனத் தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு இயந்திரத்தனமாக வாழும் ஒரு பெண், எப்போது தனக்காகச் சிந்திக்கத் தொடங்குகிறாளோ, அப்போதுதான் உண்மையான மாற்றம் நிகழ்கிறது. மேத்யூ தேவஸி (மம்மூட்டி) தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்த பின்னரும், இருபது ஆண்டுகள் சமூகத்திற்காக நடித்துவிட்டு, இறுதியாக விவாகரத்து கோரும் ஓமனாவின் முடிவு, பெண்ணின் சுயமரியாதைப் போராட்டத்தின் உச்சம்.

விவாகரத்து ஒரு குற்றமா? விவாகரத்து என்றாலே சமூகம் அதை ஒரு பெண்ணின் தோல்வியாகவோ அல்லது பைத்தியக்காரத்தனமாகவோதான் பார்க்கிறது. ஓமனா தனது விவாகரத்து மனுவில், தன் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்தவில்லை என்றாலும், தனது உரிமைகளைப் பறித்ததாகக் குறிப்பிடுவது, இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையான உரையாடல். தன் சகோதரனிடமும், மதகுருவிடமும், சமூகத்திடமும் அவள் தன் முடிவைச் சமரசம் இல்லாமல் விளக்கும் விதம், பெண்களின் மன உறுதியை எடுத்துரைக்கிறது.

இணையரையும் ரட்சிக்கும் ஓமனா இந்தத் திரைப்படத்தின் மிகச்சிறந்த அம்சம், ஓமனா தனது விவாகரத்தை வெறும் விடுதலையாக மட்டும் பார்க்காமல், தன் கணவர் மேத்யூவும் தான் விரும்பும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவதுதான். “நீ வாழ விரும்பும் வாழ்க்கை உனக்கும் வேண்டாமா?” என அவள் கேட்கும் அந்த வரி, காதலின் உண்மையான பரிமாணத்தை உணர்த்துகிறது. தன் கணவரை ஒரு குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தாமல், அவருக்கான அடையாளத்தை அவரே கண்டடைய வழிவகுக்கும் ஓமனாவின் அந்த ‘மீட்பு’ செயல்பாடு, உறவுகளின் மீதான புதிய பார்வையை வழங்குகிறது.

சமூகத்தின் இரு துருவங்கள் படம் நெடுகிலும் எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினர் எதிர்கொள்ளும் அவமானங்களும், அவர்களைச் சமூகம் கையாளும் விதமும் தங்கம் மற்றும் மேத்யூ கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஒடுக்கப்பட்டவருக்குக் குரல் கொடுப்பது பிழைப்பு அரசியல் அல்ல, அதுதான் ஆழ்ந்த அரசியல் என்பதை ஜியோ பேபி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு பெண்ணின் விடுதலை, ஒருவரின் பாலியல் தேர்வு, மற்றும் குடும்பத்தின் மீதான சமூகத்தின் அழுத்தம் எனப் பல சிக்கல்களை, மிகவும் அமைதியான அதே சமயம் ஆழமான திரைக்கதையுடன் இப்படம் கையாள்கிறது.

இறுதியில் மேத்யூ தேவஸியின் தந்தை தன் மகனை வாரி அணைத்துக் கொள்ளும் காட்சி, சமூகத்தில் மாற்றத்திற்கான தொடக்கமாக அமைகிறது. ஓமனா ஒரு சாதாரண இல்லத்தரசி மட்டுமல்ல, அவர் ஒரு போராட்டத்தின் சின்னம். இந்தத் திரைப்படம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் தன்பாலின உறவு மற்றும் குடும்ப அமைப்புகள் குறித்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பெண்கள் தங்கள் சுயத்தை மீட்டெடுக்கத் துணியும் போது, அது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் ஒரு விடுதலையைத் தருகிறது என்பதற்கு ‘காதல்: தி கோர்’ ஒரு சான்று.