புதுடெல்லி: ரஷிய அதிபர் புதின், 2 நாள் அரசு பயணமாக இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பயணத்தை நிறைவு செய்த புதின் நேற்று இரவு ரஷியா திரும்பினார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்தில் நேரில் சென்று அவரை வழியனுப்பினார்.

இந்த சூழலில், இந்தியா–ரஷியா உறவு மிகவும் நிலையானது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “புதினின் வருகையால் இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. உலகின் அனைத்து பெரிய நாடுகளுடனும் இந்தியாவிற்கு நல்ல உறவு உள்ளது.

இந்தியா–ரஷியா உறவு கடந்த 70–80 ஆண்டுகளாக மிகப்பெரியதாகவும், நிலைத்தன்மையுடனும் இருந்து வருகிறது. புதினின் வருகை, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எந்த நாடும், மற்றவர்களுடனான நமது உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியாது.

அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகமே முக்கியம். நியாயமான நிபந்தனைகளின் கீழ் அதை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. நமது அணுகுமுறை தேசிய நலன்களால் மட்டுமே இயக்கப்படுகிறது. ராஜதந்திரம் என்பது வேறொருவரை மகிழ்விப்பது அல்ல; அது நமது தேசிய நலன்களை பாதுகாப்பது பற்றியது.

நமது தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் நலன்கள் முக்கியம். அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதில் நமது நிலைப்பாடு விவேகத்துடன் இருக்க வேண்டும். இந்தியா போன்ற பெரிய, வளர்ந்து வரும் நாடு உலகின் முக்கிய அரசுகளுடன் ஒத்துழைப்பை பேணுவது அவசியம்.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடனான ரஷியாவின் உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளன. அதுபோலவே, நமது உறவுகளும் இயற்கையாகவே சில அம்சங்களில் வளர்ச்சி அடைய, சில அம்சங்கள் குறையக்கூடும்.”

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.