புதுச்சேரி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் இறங்க உள்ளது. இதற்கான தயாரிப்பாக விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், காஞ்சீபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பின், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரிய த.வெ.க.க்கு, சாலைகள் குறுகலானவை என்ற காரணத்தால் அரசு மறுப்பு தெரிவித்தது. ஆனால், பொதுக்கூட்டத்திற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசித்து அனுமதி வழங்கியுள்ளார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேடை அமைக்கப்படாமல், பிரசார வாகனத்தில் இருந்து விஜய் உரையாற்ற உள்ளார். பங்கேற்பாளர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.
கூட்டம் 10 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரம் பேர் அமரும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படுகின்றன. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், விஜய் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருவதாக புதுச்சேரி அரசு உறுதியளித்துள்ளது.