சென்னை:

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மதுவிலக்கு கொள்கை மற்றும் டாஸ்மாக் கடைகளின் இயக்கம் குறித்துத் தொடர் விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, அது குறித்த உண்மையான விவரங்களை வெளியிடாமல் வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயங்குகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மௌனம்:

இதுதொடர்பாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாக ஆளும் தவெக அரசு பெருமையுடன் கூறிக்கொள்கிறது. ஆனால், அவ்வாறு மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகளின் துல்லியமான முகவரிகள் என்ன என்பது குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை முறையான பதில்கள் அளிக்கப்படவில்லை.

மேலும், மூடப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டனவா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு ரகசியமாக இயக்கப்பட்டு வருகின்றனவா என்ற மிக முக்கியமான கேள்விக்குத் தற்போதைய அரசிடமிருந்து எத்தகைய தெளிவான பதிலும் இல்லை.

புதிய கடைகள் திறப்பு குறித்த கேள்வி:

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்குத் தற்போதைய அரசு மௌனம் காப்பதாகவும், கேள்விகளை மென்று முழுங்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 கடைகள் பற்றிய விவரங்களைக் கேட்டால், “அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்” என்ற ஒற்றைப் பதலையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து மாவட்ட மேலாளர்களிடமும் உள்ள தரவுகளை எளிதாகத் திரட்டி மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்:

தவெக ஆட்சியில் இதுவரை உண்மையாகவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்கள், அவற்றின் முகவரிகள் மற்றும் அந்தக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட ஆளும் அரசு ஏன் தயங்குகிறது என்று நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக மட்டுமே தவெக அரசு இதுபோன்று ஒரு புரளியைக் கிளப்பியதா என்ற நியாயமான சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் எழுப்பும் இந்த எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், வெறும் வெட்டி வசனங்களும் வீண் விளம்பரங்களும் இனிமேல் எடுபடாது என்றும் தனது அறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.