2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு, மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ஸ்டாலின், வாக்குப்பதிவு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளில் முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 286 EVM-களையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும், மேலும் 100 சதவீத VVPAT சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, தேர்தல் முடிவை எதிர்க்க சட்டத்தில் தனியாக Election Petition நடைமுறை உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. இத்தகைய கோரிக்கைகளை writ petition மூலம் விசாரிப்பது சட்ட நடைமுறைக்கு ஏற்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால் தற்போதைய நிலையில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் தேர்தல் வெற்றி தொடர்கிறது. அடுத்தகட்டமாக ஸ்டாலின் தரப்பு வேறு சட்ட வழியை நாடுமா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.