
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்க BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30, 2026 அன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.
இதற்கிடையில், செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 5 முதல் 2 மாதங்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுதல், பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செப்.9–15, அக்.9 மற்றும் அக்.25–31 ஆகிய தேதிகளில், வெளிமாவட்டங்களில் இருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் வாடகை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், omnibus, சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளின்போது ஜோதி எடுத்துச் செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் மட்டும் முன் அனுமதியுடன் ஜோதி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அக்.9 அன்று மாவட்டம் முழுவதும் ஜோதி ஓட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2025 வரை இதுபோன்ற நிகழ்வுகளின்போது தடை உத்தரவை மீறியதாக 1,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் விதிகளை கடைபிடித்து, சட்டம்–ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.