
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைக்கும் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் இந்தி இடம்பெற்றிருப்பதாக அவர் தனது X பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு நீண்டகாலமாக தமிழ்–ஆங்கிலம் இருமொழிக் கொள்கையை பின்பற்றி வரும் நிலையில், தமிழக அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்திக்கு இடமளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுள்ளார்.
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல; தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், அரசு நிர்வாகத் தளங்களில் தமிழுக்கு உரிய முதன்மை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பெயர்ப்பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றால் 5:3 விகிதத்திலும், பிறமொழியும் இடம்பெற்றால் தமிழ்–ஆங்கிலம்–பிறமொழி 5:3:2 விகிதத்திலும் இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து HR&CE கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அறிவிப்புப் பலகைகளை ஆய்வு செய்து, தமிழுக்கு உரிய முதன்மை இல்லாத அல்லது தேவையற்ற வகையில் இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் பலகைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் தமிழே இல்லாமல் பிறமொழிகளில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைத்துள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.