தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜயை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் போஸ்டர்கள் தூத்துக்குடியில் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நகரின் பல பகுதிகளில் காணப்படும் போஸ்டர்களில், “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்களை, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சுதாகர் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகிகள் ஒட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக பெயரும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில் India Today வெளியிட்ட சமீபத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பில், பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் நரேந்திர மோடி 49%, ராகுல் காந்தி 27% ஆதரவுடன் முன்னிலையில் உள்ள நிலையில், விஜய் 9% ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புக்குப் பின்னர் விஜயை தேசிய அரசியலில் முன்னிறுத்தும் பேச்சு தவெக வட்டாரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஆனால் இந்த ‘Vijay for PM’ பிரசாரம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 2029 மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணியின் பிரதமர் முகமாக ராகுல் காந்தியே இருப்பார் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் பி. விஸ்வநாதனும் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால் தூத்துக்குடியில் தொடங்கியுள்ள ‘நாளைய பிரதமர் விஜய்’ போஸ்டர் பிரசாரம், சாதாரண ரசிகர் ஆதரவைத் தாண்டி விஜயின் தேசிய அரசியல் எதிர்காலம் மற்றும் 2029 தேர்தல் கூட்டணி கணக்குகள் குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.