
தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் TASMAC ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பளத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, மேற்பார்வையாளர்களுக்கு மாதம் ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,689 ஊதியம் வழங்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட ஊதியம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும். ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பணி நேரத்திலும் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி, மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டாஸ்மாக் கடைகளில் MRP விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதல்முறை விதிமீறலில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்; மீண்டும் அதே தவறில் ஈடுபட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, வேலை நேர சீரமைப்பு மற்றும் பிற நலச் சலுகைகள் குறித்த கோரிக்கைகளை TASMAC ஊழியர் சங்கங்கள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த நிலையில், இந்த அறிவிப்புகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.