சென்னை:

தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகதாது அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திமுக எப்போதும் உறுதியாகச் செயல்பட்டுள்ளதாகத் திமுவின் முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, மேகதாது விவகாரத்தில் திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ரகுபதி தனது அறிக்கையின் மூலம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

மேகதாது விவகாரமும் சட்டப் போராட்டமும்:

கடந்த காலங்களில் திமுக அரசு இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சிறப்பாக நடத்தி வெற்றி பெற்றுள்ளது என்பதை ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மேகதாது விவகாரத்தில் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை சரியாகக் கையாளவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான மற்றும் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஒரு கற்றறிந்த வழக்கறிஞரிடம் சென்று தெளிவுபெற்றிருக்க வேண்டும் என்றும், பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பொய்யான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க அனுமதி கோரிய போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் இன்றி அதனைத் தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்துத்தான் திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் சென்றோம். மேகதாது அணையே கட்டக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் முதன்மை நிலைப்பாடு. குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது என்று குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ‘இது ஒரு தொடக்கக் கட்டம் (Premature Stage)’ என்று கூறி முடித்து வைத்தது என்றார்.

“லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இது புரியாது”:

இதனைச் சுட்டிக்காட்டிய ரகுபதி, “ஆதவ் அர்ஜுனாவிற்கு இதெல்லாம் புரியாது, புரிய வாய்ப்பும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள், இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தனித் திருத்தம் கொண்டு வந்து புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும் அவர் நினைவூட்டினார்.

“மேகதாது அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிகர் எவருமில்லை” என்று பெருமிதம் தெரிவித்த ரகுபதி, தற்போதைய அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது வெறும் ‘ரீல்ஸ்’ எடுக்க மட்டுமே உதவும் என்றும், இது விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் எச்சரித்தார்.

டெல்டா விவசாயிகளின் நலன் மற்றும் முரண்பாடுகள்:

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பிரச்சனையைத் தீர்க்க உடனே ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க தவெக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது இது குறித்துக் கடிதம் கொடுக்கப்பட்டதா என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது என்றும் அவர் சாடினார்.

முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளின் மொத்த உருவமாகத் தவெக விளங்குவதாகவும், வழக்கறிஞர் உமாபதி குறித்துச் சட்டமன்றத்தில் ஒருவிதமாகப் பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசுவதாகவும் ரகுபதி விமர்சித்துள்ளார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி தண்ணீர் வராததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப் பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.