இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நாளுக்கு நாள் சமூக வலைதள மோகம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு வருவதோடு, தங்களுக்குப் பிடித்தமான அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, தமிழக முதலமைச்சர் விஜய் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் பின்னுக்குத் தள்ளி முன்னிலைப் பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தலைவர்களின் நிலவரம்
உலக அளவில் அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை உலக அளவில் 10.2 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். மத்திய அமைச்சர்களைப் பொறுத்தவரை அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தியை அவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் முந்தியுள்ளார். மேலும், மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஒவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேர் பின்தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசாரக் களமாக மாறிய இன்ஸ்டாகிராம்
தற்காலத்தில் இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய அரசியல் பிரச்சாரக் களமாகவும் உருவெடுத்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் இளைஞர்களைத் திரட்டி நடைபெற்ற போராட்டங்கள் கூட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவே பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டின.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே கட்சியின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் கிடைத்ததன் காரணமாகவே விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடிந்தது. அதே இளைஞர்களின் பெரும் ஆதரவு வரிசையில் தான், தற்போது இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.