சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வரவிருக்கும் பருவமழை காலங்களில் வெள்ள அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்கூட்டிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மணப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் அடையாறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் இப்ப பணிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

அடையாறு ஆற்றுப் பகுதி தூர்வாரும் பணி: சென்னை நகரின் மிக முக்கிய ஆற்றுப்படுகைகளில் ஒன்றான அடையாறு ஆறு, ஆதனூர் ஏரியில் தொடங்கி மொத்தம் 42.38 கி.மீ தூரம் பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரைக் கடத்தும் முக்கிய வடிகாலாக இது விளங்குகிறது. எனினும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பாயும் இவ்வாற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் மிதவைத் தாவரங்கள் படர்ந்து நீரோட்டத்தை வெகுவாகத் தடுத்து வந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு, நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளன. விமான நிலைய ஓடுபாதையின் கீழ்ப்பகுதி முதல் திரு.வி.க பாலம் வரையிலும், அடையாறு முகத்துவாரத்திலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி கடலுக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு: பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழினி வரை நீண்டுள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் ஒரு பகுதியான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றுப்பகுதியில் இருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை சுமார் 23.5 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இப்பகுதியில் சுமார் 8,000 கன அடி மழைநீரானது ஒக்கியம் மடுவு வழியாகக் கடலில் கலக்கிறது.

சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இக்கால்வாயில் ஆகாயத்தாமரைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் தேங்கி நிற்பதால் நீரோட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் கடுமையான நீர்த்தேக்கம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு வெள்ள அபாயம் மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பருவமழை தொடங்குவதற்கு முன்னரே அனைத்து வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவைச் செயல்படுத்தும் வகையில், அமைச்சர் என். ஆனந்த் இப்பணிகளைத் தொடங்கி வைத்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சரவணன், எம்.ஹரிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆஃப்தாப் ரசூல், தலைமைப் பொறியாளர் எம்.ஜானகி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.