2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அப்படியே அமல்படுத்த தமிழக அரசுக்கு சட்டப்பூர்வ கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் பின்னர் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தொடரப்பட்டன.

வழக்கு விசாரணையின் போது அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில், விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் அரசை சட்டரீதியாக கட்டுப்படுத்துபவை அல்ல என்றும், அவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை என்றும் வாதிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹25 லட்சம்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே ₹25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையம் பரிந்துரைத்திருந்த கூடுதல் நிதியுதவியை அரசு வழங்கவில்லை என்றும், அந்த பரிந்துரையை அமல்படுத்தாதது மட்டுமே சட்டவிரோதம் என கூற முடியாது என்றும் அரசு தரப்பு வாதிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மனுதாரர் தரப்பின் கேள்வி

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், பொதுமக்கள் உயிரிழந்த மிக முக்கியமான மனித உரிமை சம்பவம் தொடர்பாக ஆணையம் அளித்த பரிந்துரைகளை அரசு புறக்கணிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதற்காக தனி Special Investigation Team (SIT) அமைக்க அரசு தயாராக உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீதான நடவடிக்கை

முன்னதாக அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய சில IAS மற்றும் IPS அதிகாரிகள் மீது தொடங்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் பின்னர் கைவிடப்பட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆகஸ்ட் மாத விசாரணைகளிலும், ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொடர்பான முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மற்றொரு வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் எந்த அளவு அரசை கட்டுப்படுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதற்கு நீதிமன்றத்தின் அடுத்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.