
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசிய கருத்துகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றம்சாட்டி, இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தொடர்பாக முதலமைச்சர் விஜய் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திருமணமான சில மாதங்களிலேயே, 23 வயதில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சுமார் ஓராண்டு சிறையில் இருந்ததாகவும், அந்த காலத்தில் அவர் கடுமையான தாக்குதல்களையும் சிறைக் கொடுமைகளையும் சந்தித்ததாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் வரலாற்றையும் தியாகத்தையும் விஜய் கொச்சைப்படுத்தியதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினும் ஏற்கெனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிலளித்திருந்தார். தனது மிசா கால சிறை அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், அரசியல் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார். மேலும், விஜய் தன்னை நேரில் சந்தித்தபோது பேசிய விஷயங்களையும் நினைவுபடுத்திய ஸ்டாலின், முதலமைச்சர் பதவியில் இருப்பவர்கள் சட்டப்பேரவையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
விஜயின் சட்டப்பேரவை பேச்சு ஸ்டாலினை மட்டும் அல்லாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறனின் அரசியல் பங்களிப்புகளையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக திமுக கூறியுள்ளது. முன்னாள் திமுக ஆட்சிகள் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் சட்டப்பேரவையில் முன்வைத்ததும் இரு கட்சிகளுக்கிடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக எழும் கேள்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக திமுக தலைவர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முதலமைச்சர் முன்வைப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் விஜயின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், திமுக–தவெக இடையேயான அரசியல் மோதலின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதால், தமிழக அரசியல் களம் இன்று மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், “ஸ்டாலினை கொச்சைப்படுத்தினார்”, “ஆட்சியின் தோல்விகளை மறைக்கிறார்” உள்ளிட்டவை திமுக முன்வைக்கும் அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.