தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக அரசின் குதிரை பேர நடவடிக்கைகளுக்கு எதிராக, ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து அதிமுக சார்பில் முறையான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி இன்பதுரை ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்கினர்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “ஏற்கனவே குதிரை பேரம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் மற்றும் ஆளுநரிடம் நாங்கள் புகார் அளித்திருந்தோம். அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்துள்ளோம். தவெக அரசு, பண பலத்தைப் பயன்படுத்தி 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டுள்ளது. இந்த குதிரை பேரத்தை உடனடியாகத் தடுக்க வேண்டியது ஆளுநரின் கடமை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி இன்பதுரை, “தேர்தலுக்குப் பிறகு அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவை ஆட்சியமைக்க அழைத்தபோது, குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டேன் என ஆளுநர் உறுதியளித்திருந்தார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளால் அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போதே, மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். ஆளுநர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளிப்படையாகக் கூறியது போல, தமிழகத்தில் தவெக அரசு மேற்கொண்டு வரும் இந்த ஜனநாயக விரோத குதிரை பேரத்தை அனுமதிக்கக்கூடாது என்றும், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கூடுதலாக, ரகசிய காப்புப் பிரமாணத்தை (Oath of Secrecy) மீறும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனி நபர்கள் கலந்துகொண்ட விவகாரத்தையும் அதிமுகவினர் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த முறைகேடுகள் குறித்து ஆளுநர் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆளும் தவெக அரசு மீது எதிர்க்கட்சியான அதிமுக சுமத்தியுள்ள இந்தத் தொடர் புகார்கள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.