அதிமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி: எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கட்சியில் இருந்து விலகல்!
தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (அதிமுக) அடுத்தடுத்து பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற மூத்த தலைவர்கள் நேற்று விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அதிமுகவின் முக்கிய கொள்கை பரப்பு முகமும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் தொடரும் விலகல் படலம்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் மூத்த பேச்சாளராகவும், இலக்கிய அணி நிர்வாகியாகவும் இருந்த வைகை செல்வனின் இந்த அதிரடி முடிவு அதிமுக தலைமைக்கு மேலும் ஒரு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது காட்டமான விமர்சனம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வைகை செல்வன் அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில், கட்சியின் தலைமைப் பண்பு குறித்து மிகவும் கடுமையான மற்றும் உருக்கமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒரு தலைவர் என்பவர், தான் ஒருவேளை அழிந்தால் கூட தனது கொள்கைகளும், தான் சார்ந்த இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார். ஆனால், இயக்கமும், அதற்காக உழைக்கும் லட்சக்கணக்கான கழகத் தொண்டர்களும் அழிந்துபோனால் கூட, தான் மட்டுமே சுயநலத்தோடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஒருபோதும் நல்ல தலைவராக இருக்க முடியாது” என்று எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சாடியுள்ளார்.
திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் சமரசம் – அடையாளத்தை இழந்த அதிமுக: மேலும் அக்கடிதத்தில், “திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டதன் மூலமாக, அதிமுக தனது அடிப்படை தத்துவமான திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து சமரசப் போக்கிற்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக, பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், இதய தெய்வம் ஜெயலலிதாவும் வளர்த்த இந்த இயக்கம் தனது தனித்துவமான அடையாளத்தை முழுமையாக இழந்துவிட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவுகளைத் தலைமை எடுப்பதன் காரணமாகவே, அதிமுக இன்று தனது வெற்றிப் பாதையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
புறக்கணிப்பு மரணத்தை விடக் கொடியது – வள்ளுவர் நெறி: தனக்கு கட்சியில் நேர்ந்த அவமரியாதைகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், “கடந்த தேர்தல் களத்தில் நான் முற்றிலும் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, எனக்கென எந்தவொரு முக்கியத்துவமும் தராத நிலையிலும், கழகத்தின் வெற்றிக்காகத் தொடர்ந்து தீவிர தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், ஒரு மனிதனுக்கு மரணத்தை விடக் கொடியது அவமதிக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதுமே என்பதை நான் இந்த இயக்கத்தில் மிக ஆழமாக உணர்ந்து கொண்டேன்” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மதியாதார் பின்சென்று வாழ்வதை விட கெட்டான் எனப்படுவது நன்று என்ற திருவள்ளுவரின் “ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று…” என்ற குறளை சுட்டிக்காட்டி, மதியாதவர்களின் பின் சென்று உயிர் வாழ்வதை விட விலகுவதே மேல் என்ற முடிவுக்குத் தான் வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
வார்த்தைகளால் வடிக்க முடியாத கடுமையான வலி: தனது மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி, தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில் தன் மனதில் கடுமையான வலி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். “புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல, இந்த இயக்கத்திற்காக நான் ஆற்றிய பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை” என்று மிக உருக்கமாகக் கடிதத்தை முடித்துள்ளார். வைகை செல்வனின் இந்த விலகல் கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.