“அன்று பாதயாத்திரை, இன்று அமைதியா?” – மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தீர்மானத்தை எதிர்க்க டி.கே.சிவக்குமாருக்கு தைரியம் உள்ளதா என ஆர்.அசோகா காட்டம்!
கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தச் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றியுள்ள கண்டனத் தீர்மானம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மௌனம் காப்பது ஏன் என்று அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஆர்.அசோகா கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் பின்னணியும் அணைத் திட்டமும்: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயமும், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு இதற்குத் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதே நேரம், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸின் அதிரடித் தீர்மானம்: சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் தலைமையில், சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க எத்தகைய போராட்டங்களையும் முன்னெடுக்கத் தயார்; மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது” என்று அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக தலைவர் ஆர்.அசோகா எக்ஸ் தளப் பதிவு: தமிழ்நாடு காங்கிரஸின் இந்தத் தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ-வும், எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.அசோகா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை நோக்கித் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “ஒரு காலத்தில் கர்நாடகாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிப் பிரம்மாண்டமாகப் ‘பாதயாத்திரை நாடகத்தை’ அரங்கேற்றியவர் தான் இதே டி.கே.சிவக்குமார். ஆனால், இப்போது அதே மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ள போது, அதனைக் கண்டிக்கத் துப்பில்லாமல் அமைதியாக முடங்கிக் கிடப்பது ஏன்?
உங்கள் சொந்தக் கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் மாணிக்கம் தாகூர், மேகதாது திட்டத்திற்காகக் கர்நாடகா ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று நமக்கு வெளிப்படையாகவே சவால் விடுத்துள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியமும், அரசியல் உறுதிப்பாடும், கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறையும் இருந்தால், இப்போதே பெங்களூருவில் இருந்து சென்னைக்குப் பேரணியாகச் செல்லுங்கள். சென்னை காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, கர்நாடகாவிற்கான உங்கள் அரசியல் அர்ப்பணிப்பை நிரூபித்துக் காட்டுங்கள்” என்று ஆர்.அசோகா மிகக் காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸின் தீர்மானமும், அதற்கு எதிராகக் கர்நாடக பாஜக எழுப்பியுள்ள இந்த அரசியல் விமர்சனமும் காவிரி விவகாரத்தில் இரு மாநில காங்கிரஸ் தலைமைகளுக்கும் இடையே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.