வாட்ஸ்அப்பின் புதிய ‘யூசர்நேம்’ அம்சம்: மத்திய அரசின் நோட்டீஸிற்குப் பாதுகாப்பு அம்சங்களுடன் மெட்டா நிறுவனம் விரிவான விளக்கம்!

உலக அளவில் மிக பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘யூசர்நேம்’ (Username) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த அம்சத்தால் சைபர் குற்றங்கள் மற்றும் போலி கணக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, தகுந்த பாதுகாப்பு ஆய்வுகள் முடியும் வரை இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது என மத்திய அரசு அண்மையில் மெட்டா (Meta) நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த யூசர்நேம் அம்சம் எவ்வாறு பாதுகாப்பானது என்பது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது மத்திய அரசிடம் விரிவான விளக்கமளித்துள்ளது.

போலி கணக்குகளைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை: வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், பயனர் பெயர் (Username) உருவாக்கப்படும் போது ஏற்படும் போலி கணக்குகள் (Fake Accounts) குறித்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசு நிறுவனங்கள், பல்வேறு அமைச்சகங்கள், பொதுத்துறை அமைப்புகள், விஐபிக்கள், பிரபலங்கள் மற்றும் மெட்டா நிறுவனத்தால் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்பட்ட (Verified blue tick) கணக்குகளின் பெயர்களை வேறு யாரும் தவறாகவோ அல்லது போலியாகவோ பயன்படுத்த முடியாதபடி, அந்தப் பெயர்கள் அனைத்தும் வாட்ஸ்அப் தரப்பால் முன்கூட்டியே முடக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமான பெயர் இருந்தால் மட்டுமே தேட முடியும்: மேலும், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக வலைத்தளங்களைப் போல வாட்ஸ்அப்பில் ஒரு பொதுவான பெயரைத் தேடி (Search) யாரையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது. ஒரு பயனர் தங்களுக்கு என அமைத்துள்ள மிகத் துல்லியமான யூசர்நேம் (Exact Username) தெரிந்தால் மட்டுமே, மற்றொரு நபரால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தொடர்புகொள்ள முடியும் என்று வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது.

‘யூசர்நேம் கீ’ மூலம் இமாலய பாதுகாப்பு: பயனர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ‘யூசர்நேம் கீ’ (Username Key) என்ற கூடுதல் ரகசியக் குறியீட்டுப் பாதுகாப்பு அம்சமும் இந்த வசதியுடன் வழங்கப்பட உள்ளது. தேவையற்ற புதிய நபர்கள் அல்லது மர்ம நபர்கள் தங்களுக்குத் தேவையின்றி மெசேஜ் செய்வதைத் தடுக்க இந்த வசதி உதவும். ஒரு பயனர் தனது ‘யூசர்நேம் கீ’-ஐ ஆன் செய்து வைத்தால், அந்த ரகசியக் குறியீடு தெரிந்தால் மட்டுமே புதிய நபர்களால் அவருடன் சாட்டிங்கைத் தொடங்க முடியும்.

அதேபோல், இந்த யூசர்நேம் அம்சம் என்பது பயனர்களின் தனிப்பட்ட விருப்பத் தேர்வு (Optional) மட்டுமே ஆகும். இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்களது மொபைல் எண்ணையே முதன்மை அடையாளமாகத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புதிய கணக்குகளுக்கான எச்சரிக்கை தகவல்: ஒருவேளை, புதிய யூசர்நேம் அம்சம் மூலம் முன்பின் தெரியாத நபர் ஒருவர் உங்களுடன் முதன்முறையாகத் தொடர்புகொள்ள முயன்றால், வாட்ஸ்அப் செயலி உங்களுக்கு ஒரு எச்சரிக்கை விபரத்தைக் காண்பிக்கும். அதில், உங்களைத் தொடர்புகொண்ட அந்தக் கணக்கு எந்த நாட்டைச் சேர்ந்தது (Country of Origin) மற்றும் அந்தக் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது போன்ற மிக முக்கிய விபரங்கள் அடங்கியிருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் பாதுகாப்பானது தானா என்பதை எளிதில் அறியலாம்.

மத்திய அரசின் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் முழுமையான ஆய்வுகள், பரிசீலனைகளுக்குப் பிறகே இந்த ‘யூசர்நேம்’ அம்சம் இந்தியாவில் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.