பீகார் முன்னாள் முதல்வர்களான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு, மாநில அரசு மீண்டும் ‘இஸட்’ (Z) பிரிவு பாதுகாப்பை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் பிரிவு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், இவர்களுக்கான ‘இஸட் பிளஸ்’ (Z+) பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டிருந்தது. அரசு பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, லாலு மற்றும் ராப்ரி தேவி தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வீரர்களைத் திருப்பி அனுப்பியிருந்தனர். இந்த விவகாரம் பீகார் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகிய இருவருக்கும் குண்டு துளைக்காத பிரத்யேக வாகனங்கள் மற்றும் ‘ஹெட்குவார்ட்டர்ஸ் ரியாக்ஷன் டீம்’ (HQRT) எனப்படும் சிறப்புப் படை பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், பாட்னாவில் உள்ள தங்களது அரசு பங்களாவைக் காலி செய்வது தொடர்பாக மாநில அரசுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து வருகிறது. பங்களாவைக் காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி, “அரசு இல்லங்கள் மக்களுக்குச் சொந்தமானவை, அவற்றை யாருடைய தனிப்பட்ட சொத்தாகவோ அல்லது பூர்வீக சொத்தாகவோ கருத முடியாது. எனது பதவிக்காலம் முடிந்த 24 மணி நேரத்திற்குள் நான் அரசு இல்லத்தைக் காலி செய்துள்ளேன்” என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். இருப்பினும், லாலு குடும்பத்தினர் பங்களாவை காலி செய்வது தொடர்பான சட்டப் போராட்டமும், பாதுகாப்பு தொடர்பான அரசியல் விவாதங்களும் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.