திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான சந்த்ரிமா பட்டாச்சார்யா, தனது மாநிலத் தலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி சுப்ரதா பக்‌ஷி உடல்நலக்குறைவால் பதவி விலகியதைத் தொடர்ந்து, சந்த்ரிமா பட்டாச்சார்யா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், மாநிலத் தலைவர் பொறுப்பு மட்டுமல்லாமல், கட்சி மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் கையொப்பமிடும் அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கான பிரதிநிதித்துவம் என அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா பின்னணி: கொல்கத்தாவின் கிழக்கு பெருநகர பைபாஸ் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான ‘டிஎம்சி பவனை’, தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்று கூறிக்கொள்ளும் அதிருப்தி அணியினர் நேற்று கைப்பற்றினர். அந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் இருந்த சந்த்ரிமா பட்டாச்சார்யா, அதிருப்தியாளர்கள் கட்டிடத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், சந்த்ரிமா மிகுந்த மனவேதனை அடைந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்த்ரிமா, “யார் மீதும் எனக்குக் குற்றச்சாட்டு இல்லை, ஆனால் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டேனோ என்ற வருத்தம் உள்ளது. டிஎம்சி பவனை நான் ஒப்படைத்துவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியது வேதனையளிக்கிறது. நான் பவனை ஒப்படைக்க யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

அரசியல் மாற்றம்? சந்த்ரிமா பட்டாச்சார்யா அதிருப்தி அணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. இது குறித்துக் கேட்டபோது, “இது குறித்து இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை, காலமே பதில் சொல்லும்” என்று மழுப்பலாகப் பதிலளித்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களுடன் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பிறகு ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 58 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியில் இணைந்ததும், அவர்களே தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைப் பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சூழலில், மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான ஒரு தலைவரே விலகியிருப்பது, திரிணமூல் காங்கிரஸில் அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.