புது டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சுஷ்மிதா தேவ், தனது பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, தற்போது நாடாளுமன்றம் வரையிலும் பரவியுள்ளது. மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவரான சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதற்கு பின்னர், சுஷ்மிதா தேவின் ராஜினாமா மம்தா தரப்புக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

அசாமின் சில்சார் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தேவ், 2019 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியிலிருந்து விலகி 2021ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில், தனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு சுஷ்மிதா தேவ் கேட்டுக்கொண்டார். “எனது அரசியல் எதிர்காலம் அசாமில்தான் உள்ளது. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்ய விரும்பவில்லை. மம்தா பானர்ஜி குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.

ராஜினாமாவுக்குப் பின்னர், டெல்லியில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை சுஷ்மிதா தேவ் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் அவர் பாஜகவில் இணைவார் என்றும், அசாமில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் மாற்றம், திரிணமூல் காங்கிரஸின் நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.