கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டார். கட்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள் மாநிலத் தலைவராக உயர்ந்த அவர், கடந்த ஆண்டு அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மறுத்த அண்ணாமலை, தேர்தல் முடிந்ததும் தனி இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

கடந்த வாரம் ஆன்லைன் வாயிலாக பேசிய அவர், “வி தி லீடர்ஸ்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தில் இணையவழியாக லட்சக்கணக்கானோர் இணைந்து வருவதாகவும், தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளும் இதில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், பா.ஜ.க. மாநிலச் செயலாளரும், அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளருமான அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர், “ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தி.மு.க. உள்ளது என்று கூறுகிறோம். ஆனால் தமிழக பா.ஜ.க.வும் 4 அல்லது 5 பேரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவர்களே மீண்டும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்” எனக் கூறினார்.

மேலும், “பிறப்பால் நான் தெலுங்கர் என்றாலும், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன். விரைவில் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய உள்ளேன். எதிர்காலத்தில் அண்ணாமலைக்கும் விஜய்க்கும் இடையில்தான் அரசியல் போட்டி இருக்கும்” என அவர் வலியுறுத்தினார்.

இதனால், தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் உருவாகும் நிலையில், அண்ணாமலையின் “வி தி லீடர்ஸ்” இயக்கம் மற்றும் அதில் இணையும் முக்கிய நிர்வாகிகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.